×

சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டத்தில் 32 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 442 மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் செயலர் துரை ரவிச்சந்திரன், கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆணைய துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான், ஆணைய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் சரிவர கொண்டு சேர்க்கப்படவில்லை. எவ்வித திட்டங்களும் பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேரவில்லை என்பது இவ்வாய்வின் மூலமாக அறிந்து கொண்டோம். இவ்வாய்வில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்குகளை நிறைவேற்றுவதில் பல இன்னல்கள் உள்ளது என்பதை அறிய முடிகிறது. சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் அடக்க தலங்கள், கல்லறைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சம்மந்தப்பட்ட சுய உதவிக் குழுக்கள் தங்களது பங்கு தொகையினை செலுத்தியிருந்தாலும் கூட அரசாங்கம் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த வித கடனுதவிகளும் வழங்காமல் இருந்துள்ளது. கடந்த ஆண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் வரலாற்றிலேயே முதன் முறையாக சிறுபான்மையினர் நலத்துறை என்ற புதிய அமைச்சகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாய்வுக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.ப.மதுசூதனன்,  காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், திருவேற்காடு டி.ரமேஷ், நகர தலைவர் வி.இ.ஜான், இமாலயா கே.அருண்பிரசாத், வக்கீல் இ.கே.ரமேஷ், திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஈக்காடு கே.முஹமது ரஃபி, வினோத்குமார் ஜெயின், ஆர்.எம்.பதம்சந்த், ஏ.எம்.சாந்திலால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Meeting ,Peter Alphonse , Rs 3.79 lakh worth welfare assistance to 32 persons at the Minority Conference: Peter Alphonse
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...