ஜம்மு, இமாச்சல பிரதேசத்தில் மேகம் வெடித்து 13 பேர் பலி: திடீர் வெள்ளத்தில் 30 பேர் மாயம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழை காரணமாக 13 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹன்சார் கிராமத்தில்  திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக நேற்று அதிகாலை கனமழை பெய்தது. 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 25 பேர் காணாமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார், ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.  இதேபோல், இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை காரணமாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குல்லு மாவட்டம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 4 பேர் உயிர் இழந்துள்ளனர். லாஹலில் உள்ள உதய்பூரில் 2 கூடாரங்களில் தங்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் ஜேசிபியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 7 தொழிலாளர்களை காணவில்லை.

கார்கில் நீர்மின் திட்டம் சேதம்

* மேக வெடிப்பு மழை வெள்ளத்தால் கார்கிலில் உள்ள சிறிய நீர்மின் திட்டம் சேதம் அடைந்துள்ளது.

* பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ள நிலவரத்தை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories:

More