×

நாடாளுமன்றம் 7வது நாளாக முடங்கியது காகிதங்களை கிழித்து வீசி எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி: பெகாசஸ் செல்போன் ஒட்டுகேட்டு, வேளாண் சட்டம்  விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 6 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கின. கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆனால், அமளிக்கிடையே சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை நடத்தி முடித்தார். 10க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் முதல் முறையாக கேள்வி நேரம் ஒத்திவைக்காமல் நடந்திருப்பது இதுவே முதல் முறை.

ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் மக்களவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. பாஜ எம்பி ராஜேந்திர அகர்வால் அவையை தலைமை தாங்கி நடத்திய போது, காங்கிரசின் குர்ஜீத் அஜாலா, பிரதாபன், ஹிபி ஈடன் உள்ளிட்ட சில எம்பிக்கள், அன்றைய அவை அலுவல் காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசி எறிந்தனர். எம்பிக்கள் கொண்டு வந்திருந்த பதாகைகளும் கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசப்பட்டது. இதனால், அவையில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த அமளிக்கு இடையே, கூடுதல் செலவினங்களுக்காக ரூ.23,675 கோடிக்கான துணை மானிய கோரிக்கை மசோதாவும், திவால் சட்ட திருத்த மசோதாவும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதே போல, மாநிலங்களவையில் பெகாசஸ் விவகாரத்தால் அனல் பறந்தது. இதில் அமளிக்கு இடையே சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட திருத்த மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையும் தொடர் அமளியில் 7வது நாளாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலம் எப்போது ஏவப்படும்?
* மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்தபோது, ‘ஜம்மு காஷ்மீருக்கு தகுந்த நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்,’ என கூறினர்.
* பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் லட்சத்தீவுக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான எந்த பரிசீலனையையும் அரசு செய்யவில்லை என ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
* நிலவை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் விண்ணில் செலுத்தப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கூறி உள்ளார்.

Tags : Parliament , Parliament was paralyzed for a day on the 7th, with opposition parties tearing up papers
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...