குத்துச்சண்டையில் பதக்க வாய்ப்பு காலிறுதியில் பூஜா ராணி

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை மிடில்வெயிட் (69-75 கிலோ) பிரிவு காலிறுதியில் விளையாட இந்திய வீராங்கனை பூஜா ராணி தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் குத்துச்சண்டையின் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் விகாஷ் கிருஷணன், மணீஷ் கவுசிக், ஆஷிஷ் குமார் ஆகியோர் தொடர்ந்து தோல்வி அடைந்து ஏமாற்றமளித்த நிலையில், மகளிர் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் (51 கிலோ) 2வது சுற்றுக்கும், லவ்லினா போர்கோகெய்ன் (69 கிலோ) காலிறுதிக்கும் முன்னேறி பதக்க நம்பிக்கையை அளித்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது மற்றொரு இந்திய வீராங்கனை பூஜா ராணியும் இணைந்துள்ளார்.

பூஜா நேற்று நடந்த மிடில்வெயிட் பிரிவு முதல் சுற்றில் அல்ஜீரியா வீராங்கனை இச்ரக் சாயிப்பை எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட பூஜா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதியில் அவரை எதிர்த்து விளையாடும் வீராங்கனை யார் என்பது இன்று முடிவாகும். குத்துச்சண்டையில் இன்று நடைபெறும் 91 கிலோ எடை பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சதீஷ்குமார் களமிறங்க உள்ளார். அவர்  ஜமைக்கா வீரர் ரிச்சர்டோ பிரவுனை எதிர்த்து களம் காணுகிறார். அதேபோல் 51 கிலோ எடை பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம், கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் லோரெனாவை எதிர்கொள்கிறார். லவ்லினா நாளை நடைபெறும் காலிறுதியில் சீன தைபே வீராங்கனை நின் சின் சென்னுடன் மோத உள்ளார்.

Related Stories: