×

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் குறைகளை சுட்டிக்காட்டினால் திமுக ஆட்சி சிறப்பாக நடக்கும்: எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி

சேலம்: எதிர்க்கட்சி தலைவராக நான் குறைகளை சுட்டிக்காட்டினால் திமுக ஆட்சி சிறப்பாக நடக்கும் என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் சேலத்தில் அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள வீட்டின் முன்பு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். எங்கள் கட்சியினர் மீது போடும் வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம். வழக்கு சுமத்தப்படும் கட்சியினருக்கு துணையாக நிற்போம்.கடன் சுமையில் அரசு இருப்பதாக கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் நாங்கள் வாங்கிய கடன்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்சிக்கும், அது சார்ந்த திட்டங்களுக்கும் மட்டுமே பெறப்பட்டது. வன்னியர் இடஒதுக்கீடு ஏற்கனவே நாங்கள் அறிவித்த ஒன்று. அதற்கு தற்போதைய அரசு, ஆணை பிறப்பித்துள்ளது.

இதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு தரவேண்டும். மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்போம். லாட்டரி சீட்டை கொண்டு வருவதாக எனக்கு வந்த தகவல் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டேன். வரவில்லை என்றால் நன்றி. எதிர்க்கட்சி தலைவராக நான் இருந்து குறைகளை சுட்டிக்காட்டினால்தான், திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக நடக்கும். டெல்லியில் பிரதமரை நீங்களும் ஓபிஎஸ்சும் தனித்தனியாக சந்தித்தீர்களே? என்று கேட்கிறீர்கள். எங்களது போட்டோவை எல்லாரும் பார்த்தீர்களே, ஒன்றாகத் தானே இருந்தோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* எழுத்துப்பிழையால் கிளம்பியது சர்ச்சை
ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கையில் பதாகையை ஏந்தியபடி கோஷமிட்டார். அவரது கையில் பிடித்திருந்த பதாகையில், ‘‘நீட்தேர்வை ரத்து செய்றேன்’’ என்பதற்கு பதிலாக ‘‘ரத்து செய்ரேன்’’ என்று பிழையுடன் அச்சிடப்பட்டிருந்தது. இதை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்தால் அப்படித் தான் என்று கலாய்த்துள்ளனர்.

Tags : DMK government ,Leader of the Opposition ,Edappadi Palanisamy ,Salem , The DMK government will do better if it points out the shortcomings as the Leader of the Opposition: Edappadi Palanisamy interview in Salem
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...