×

பகலிரவு பாராமல் 3 வாகனங்கள் போராட்டம்; ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: குடியிருப்புவாசிகள் கடும் அவதி

நெல்லை: நெல்லை அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 2வது நாளாக இன்றும் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீயில் இருந்து எழும் புகைமூட்டம் காரணமாக அதை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு நிலைய வாகனங்கள் களம் இறங்கியுள்ளன. நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ராமையன்பட்டியில் 150 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இதில் 32.5 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு இயங்கி வருகிறது.

நெல்லை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் அள்ளப்படும் 110 டன் குப்பைகள் தினமும் அங்கு கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் மாநகர பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நுண் உர குப்பை கிடங்குகளால் அங்கு கொட்டப்படும் குப்பைகள் அளவு ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆடி மாத காற்றில் ஆண்டுதோறும் ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ பிடித்து எரிவது வழக்கம். இவ்வாண்டும் நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி ெகாண்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குப்பைகள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தகவலறிந்து அங்கு வந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாளை வீரராஜ், பேட்டை முத்தையா, கங்கைகொண்டான் ராமராஜ் மற்றும் குழுவினர் நேற்றிரவு தொடங்கி தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆடிக்காற்று பலமாக வீசுவதால் தண்ணீரில் தீயை அணைந்தாலும் புகைமூட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ராமையன்பட்டி சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கின்றன. பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வண்ணம் வாகனங்கள் செல்கின்றன. குப்பைக்கிடங்கில் பற்றிய தீ 7 கிமீ சுற்றளவிற்கு புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அரசு புதுக்காலனி, ராமையன்பட்டி, பாலாஜி நகர், சத்திரம் புதுக்குளம், சங்குமுத்தம்மாள்புரம், அன்னை வேளாங்கண்ணி நகர், சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு புகைமூட்டம் காணப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் தீயை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தாலும், புகை மூட்டம் அதிகம் காணப்படுவதால், மாநகராட்சி உதவியோடு லாரி, லாரியாக மண் வரவழைத்து அவற்றை தீயின் மீது வீசி புகை தணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Raminbatti , 3 vehicles struggle regardless of day and night; Ramayanapatti garbage depot on fire for about 2 days: Residents suffer
× RELATED யானை தாக்கி விவசாயி பலி