×

ஹரப்பா நாகரீகத்தை அடையாளப்படுத்தும் ‘தோலவிரா’வுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

புதுடெல்லி: ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த நகரமான தோலவிராவுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சீனாவின் புஜோவில் நடைபெறும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44 வது கூட்டத்தின் போது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் தெலங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் மற்றும் குஜராத்தை சேர்ந்த தோலவிரா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.  இரண்டு புதிய தளங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதால், இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

தோலவிரா குறித்து கருத்து தெரிவித்த யுனெஸ்கோ, ‘பழங்கால நகரமான தோலவிரா தெற்காசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க நகர நாகரீகங்களில் ஒன்றாகும். கிமு 3 முதல் 2ம் நூற்றாண்டை சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் ஐந்து பெரிய ஹரப்பா நாகரீக தளங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1968ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தளத்தில் நீர் மேலாண்மை அமைப்பு, பல அடுக்கு தற்காப்பு வழிமுறை கட்டுமானங்கள், கட்டுமானத்தில் கல்லின் விரிவான பயன்பாடு, சிறப்பு கட்டமைப்புகள் போன்றவற்றால் கவனம் ஈர்க்கிறது.

செம்பு, கிளிஞ்சல்கள், கல், விலைமதிப்பற்ற கற்களின் நகைகள், டெரகோட்டா, தங்கம், தந்தங்கள் போன்ற பல்வேறு வகையான கலைப்பொருட்களும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது. தோலவிராவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags : UNESCO ,Tolavira ,Harappan , UNESCO recognizes ‘Tolavira’, symbolizing the Harappan civilization
× RELATED மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடியில் நவீன...