×

உருமாறிய தொற்றால் பாதித்த இந்தியா உள்ளிட்ட ‘சிவப்பு பட்டியல்’ நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை: சவுதி அரேபியாவின் அறிவிப்பால் அதிர்ச்சி

ரியாத்: உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்ட சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு சவுதி மக்கள் சென்றால், அவர்களுக்கு 3 ஆண்டு பயண தடை அறிவிக்கப்படும், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவில், நேற்று புதியதாக 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 5,20,774 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 8,189 பேர் நோய் தொற்றால் இறந்துள்ளனர். இந்நிலையில், சவுதி குடிமக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை சவுதி அரசு கடுமையாக்கி வருகிறது.

அதன்படி, மாநில செய்தி நிறுவனமான எஸ்பிஏ, உள்துறை அமைச்சக செய்தியை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக அதிகாரிகளின் முன் அனுமதியின்றி, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட சில சவுதி குடிமக்கள் பயண விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட குடிமக்கள் சவுதிக்கு திரும்பி வரும்போது, நாட்டின் சட்டவிதிமுறைகளின்படி கடுமையான அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு மூன்று வருடங்கள் வெளிநாடு செல்ல பயண தடை விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய வகை உருமாறிய வைரஸ் தொற்றுகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, சவுதி அரேபியாவால் சிவப்பு பட்டியலில் சில நாடுகள் உள்ளன. அந்த நாடுகளுக்கு செல்லும் சவூதி அரேபிய குடிமக்களுக்கு, மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும். குறிப்பாக ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி இந்த நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது வேறொரு நாட்டின் வழியாகவோ செல்ல தடை அமலில் இருக்கும். மேலும், தடுப்பூசி போடாத எந்த வெளிநாட்டினரும், சவுதிக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும் அறிவிக்கப்படாத கடுமையான விதிமுறைகளை சவுதி அரேபியா அறிவித்துள்ளால்,  அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags : India ,Saudi Arabia , 3-year travel ban on 'red list' countries, including India, affected by mutant epidemic: shock from Saudi Arabia's announcement
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!