தேர்தலில் அதிமுக படுதோல்வி; அன்வர் ராஜா பேச்சுக்கு செல்லூர் ராஜு கண்டனம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசுகையில்,‘‘ கிராம மக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது, அதிமுகவினர் ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்களா என்றுதான் கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்லாமல் மறைத்தால் அவர்கள் உங்களை மறந்து விடுவார்கள். நடந்து முடிந்த தேர்தலில் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்து சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை. இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை. யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறார்களா?’’ என்றார். மாஜி அமைச்சரின் சர்ச்சை பேச்சு, அதிமுக கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரையில் நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில்,  சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாததே தோல்விக்குக் காரணமென அன்வர்ராஜா பேசியிருக்கிறார். இது தவறான கருத்து. தலைவர்கள் பெயர் இல்லாமல் அதிமுக இல்லை. அவர் கூறிய கருத்து தவிர்க்கப்பட வேண்டியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பெரியதாக வைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களை சிறியதாக வைத்து, தான் பிரசாரம் செய்யப்பட்டது. தோல்விக்கு பாஜ உள்ளிட்ட தோழமை கட்சிகள் காரணம் அல்ல என்றார்.

Related Stories:

>