×

500 மாணவர்களுக்கு கொரோனா: கேரளாவில் பிடெக் தேர்வுகள் ரத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில்தான் அனைத்து ெபாறியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த பல்கலையின் பொறியியல் கல்லூரிகளில் பிடெக் முதலாம் மற்றும் 3ம் செமஸ்டர் தேவுகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தேர்வுகளை நடத்த கூடாது என்று மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேர்வுகள் தொடங்கின. இந்த நிலையில் தேர்வுக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரவ தொடங்கியது.

இதையடுத்து முதலாம் மற்றும் 3ம் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய கோரி, ஆலப்புழாவை சேர்ந்த சாகர் உள்பட 8 மாணவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், தேர்வு எழுதிய 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதித்ததால் அவர்களால் ேதர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுவரை நடத்திய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ஆன்லைனில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு நீதிபதி அமித் ராவல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு நடத்துவதற்கு பல்கலை கழக மானிய குழு கடந்த வருடம் செப்டம்பரில் வழங்கிய அறிவுரைகளை ஏன் பின்பற்றவில்லை? ஆன்லைன் மூலம் தேர்வை நடத்தாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பல்கலை கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவதற்கான சாப்ட்வேர் தங்களிடம் இல்லை என்று கூறினார். அதற்கு நீதிபதி, இறுதி பருவத்தேர்வை ஆன்லைனில் நடத்தியது போன்று, மற்ற பருவத்தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்? என்று ேகள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து இதுவரை நடந்த பிடெக் முதலாம் மற்றும் 3ம் பருவ தேர்வுகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதே போல் இன்று நடக்க இருந்த தேர்வையும் ரத்து செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய போவதாக கேரள தொழில்நுட்ப பல்கலை கழகம் அறிவித்துள்ளது.



Tags : Pidec ,Kerala , Corona for 500 students: BTech exams canceled in Kerala
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...