×

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1,500 பேர் மட்டுமே மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் இருந்து கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே அமைக்கப்பட்ட கோவிட் ேகர் சென்டர், படுக்கைகள் போன்றவை அகற்றாமல் அப்படியே பராமரித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை மேலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Chennai Corporation , Three new oxygen production plants to face Corona Third Wave: Chennai Corporation officials informed
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...