×

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி, 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, கடந்த 24ம் தேதி, தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் நெதர்லாந்து 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அடுத்து கடந்த 26ம் தேதி நடந்த போட்டியில் ஜெர்மனி, இந்திய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று காலை டோக்கியோவின் சவுத் பிட்ச்சில் ஒயி ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதியது. போட்டி துவங்கிய 2வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீராங்கனை ஹன்னா மார்ட்டின், அருமையாக ஒரு ஃபீல்டு கோலை அடித்து மிரட்டினார். தொடர்ந்து அவரே 19வது நிமிடத்தில் மீண்டும் ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். அதன் பின்னர் இந்திய வீராங்கனைகள் சற்று கடுமையாக போராடினர்.

23வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்திய வீராங்கனை தேவி ஷர்மிளா, கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2ம் பாதி ஆட்டம் துவங்கியதுமே இங்கிலாந்து வீராங்கனை லிலி அவ்ஸ்லே, சக வீராங்கனை பாஸ் செய்த பந்தை, கடத்தி சென்று, ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் இந்திய வீராங்கனைகள் செய்த தவறால், இங்கிலாந்துக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வழங்கப்பட்டது.

கிரேஸ் பால்ஸ்டன், அதில் கச்சிதமாக ஒரு கோல் அடித்தார். இறுதியில் இப்போட்டியில் இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத இந்திய மகளிர் அணி, வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் அயர்லாந்துடனும், 31ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் தென்னாப்பிரிக்காவுடனும் மோதவுள்ளது.

Tags : Olympic women's hockey ,England ,India , Olympic women's hockey: England beat India
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்