உளுந்தூர்பேட்டை - சேலம் 4 வழிச்சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்-தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கௌதமசிகாமணி எம்பி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி இந்திய தேசிய நெடுஞ்சாலை  ஆணைய (நகாய்) அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில்  கூறியிருப்பதாவது:கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட  உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் நிறைவு  செய்யப்படாத இடங்களில் விபத்து அதிகரித்து வருகின்றன. நான்கு வழி சாலை சில  இடங்களில் நிறைவு பெறாததால் 2 வழி சாலைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 7 வருடங்களில் மட்டும்  800க்கும் மேற்பட்ட இறப்புகள் வாகன விபத்துகளால் ஏற்பட்டுள்ளன. 2008 ம்  ஆண்டு 941 கோடியில் தொடங்கப்பட்ட இந்த சாலை பணியானது இதுவரையில் நிறைவு  செய்யப்படவில்லை. இதனால் பல இடங்களில் இரண்டு வழிச்சாலையாக  பயன்படுத்துவதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. குறிப்பாக ஆத்தூர்,  உடையார்பட்டி, வாழப்பாடி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம்,  எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிதிகளில் அதிக மேம்பாலங்களும்  நிறைய வளைவுகளும் இருப்பதால் வாகனங்கள் கடந்து செல்வது மிகவும் சிரமமாக  உள்ளது.    

மேலும் இந்த சாலை உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம்  வழியாக சேலம் முதல் சென்னை சாலையை இணைக்கிறது. இந்த சாலை பணி 2013ல் நிறைவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில்  இப்பகுதிகளில் பல இடங்களில் இரண்டு வழி சாலைகளாகவே உள்ளன. இச்சாலைகளில்  பெரிய கல்வி நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் மற்றும் சிறு,குறு  தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. எனவே உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு கடந்த 10  ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவு செய்யப்படாத பணிகளை உடனடியாக நிறைவேற்றி  நான்கு வழி  சாலை பணிகளை விரைவாக அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: