×

உ.பி.யில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 18 கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி அறிவிப்பு!!

லக்னோ: ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து பீகார் நோக்கி வால்வோ பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பீகாரின் தர்பாங்கா, சித்தார்பங்கீ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக கூலி தொழிலாளர்கள் 140 பேர் இந்த பேருந்தில் பயணித்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியில் அயோத்தி- லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் நிலைதடுமாறிய பேருந்து சிறிதுதூரம் இழுத்து செல்லப்பட்டு சாலையோரம் நின்றது. பேருந்தின் பின்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் 18 கூலித்தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். இது தொடர்பாக முதல்வர் யோகி அவர்களுடன் பேசினேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, பாரபங்கியில் ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயையும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் கருணைத் தொகையாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்” என்று கூறியுள்ளது.

Tags : PM Modi , நிதியுதவி
× RELATED சொல்லிட்டாங்க…