ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 2 ஆயிரம் நெல் மூட்டைகள் வருகை-தனியார் வியாபாரியிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்

கலவை : ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 2 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. மேலும், நெல் மூட்டைகளை தனியார் வியாபாரிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளை நிலங்களில் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலையை பெற முடியும். மேலும், மின்னணு வர்த்தகம் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை விரைந்து விற்பனை செய்யவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு விவசாயத்ததிற்கு முன்னுரிமை அளித்துள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று ஒரேநாளில் 2,000 நெல் மூட்டைகள் விற்பனை வந்தன.இதுகுறித்து விற்பனை கூட கண்காணிப்பாளர் மதன் கூறுகையில்,    ‘விவசாயிகள் ஈரப்பதத்துடன் நெல்லை கொண்டு வருகின்றனர்.

இதனை களத்தில் காயவைத்து பயன்படுத்தி கொள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் வாங்கப்பட்டுள்ளது. அதனை விவசாயிகள்  பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கணினி மூலம் எடை போடப்படுகிறது. விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய விலையை விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 நாட்களுக்குள் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்களின் நெல்லை தனியார் வியாபாரிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். கலவை  ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்  நியாயமான விலையில் விற்பனை செய்து பயன் பெறலாம்’ என்றார்.

நேற்றைய விலை நிலவரம்  

நெல் ரகம் சிஓ51 ஒரு மூட்டை  75 கிலோ குறைந்த பட்ச விலை ₹821 க்கும், அதிகபட்ச விலை ₹919 க்கும், நெல்  ரகம் ஏடிடீ 37 குண்டு ஒரு மூட்டை குறைந்தபட்ச விலை ₹781 க்கும், அதிகபட்ச  விலை ₹859 க்கும், நெல் ரகம் ஆர்என்ஆர் சோனா ஒரு மூட்டை குறைந்தபட்சம்   ₹1,122 க்கும், அதிகபட்ச விலை  ₹1,122 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories:

>