×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்-மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தர்மபுரி : தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எல்லா சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆய்வு கூட்டம் முடிந்தபின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒகேனக்கல் பகுதி, பெரியஅளவிலான சுற்றுலா தளமாக இருப்பதால், பரிசல் ஓட்டிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல் அந்த பகுதியில் பேருக்கால தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் முகாம் நடந்தது. பென்னாகரம் பகுதியில் 3வது அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு தயாராக, 100 கூடுதல் படுக்கை வசதியும், கூடுதல் ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டோம்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனை வளாகத்தில் ₹12 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் சிறப்பு சிகிச்சை பிரிவு மைய கட்டிடத்தை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில், தமிழக முதல்வர் திறந்து வைப்பார். கலெக்டர் அலுவலகத்தில் சேவைத்துறைகளை சேர்ந்த அனைத்து அலுவலர்களுடன் நோய் தடுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இருதயம், நரம்பியல் துறை சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தேவையான வசதிகள் இம்மருத்துவமனைக்கு செய்து கொடுக்கப்படும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, பல்வேறு மாவட்டங்களிருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு கட்டிடம் ஏற்கனவே ஒன்று உள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களில் இருந்து கூடுதலாக குவிகின்றனர்.

மருத்துவ வசதி தேவை இருப்பதால், அவர்களது சிரமைத்தை போக்கவே, தமிழக முதல்வரால் வரும் ஆகஸ்ட் முதல் திங்களில் ஒருங்கிணைந்த அவசரகால தாய்சேய் கட்டிடம் 200 படுக்கை வதிகளுடன் திறந்து வைக்கப்பட உள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையாக இருப்பதால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எல்லா சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

வரும் நிதிநிலை அறிக்கையில் இதை எதிர்பார்க்கலாம். தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், களப்பணியாளர்கள், அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்தப்பணியாளர்கள் எவ்வளவுபேர் பணியாற்றுகிறார்கள் என்பதை கண்டறிந்து, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 30ஆயிரம் அவுட்சோர்சிங், ஒப்பந்த பணியாளர்கள் தமிழகம் முழுவதும் பணியாற்றுகிறார்கள். இவர்களை முறைப்படுத்தி காலிபணியிடங்கள் நிரப்பப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த மலைக்கிராமமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக விளங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கிராமங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்திற்கு நேரடியாக சென்று தங்கியிருந்து, கலந்து பேசி மருத்துவ தேவைகள் குறித்து என்னென்ன என்பது குறித்து கேட்டுவந்துள்ளோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதில் அவர்களுக்கு சற்று தயக்கம் இருந்தது. இப்போது இந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிகொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின்கீழ் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கிறார்கள். தர்மபுரியில் அரசு நர்சிங் கல்லூரி அமைக்க முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று திறக்க பரிசிலிக்கப்படும்.

தொப்பூர் கணவாயில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தி தாய் சென்டராக மாற்றப்படும். பின்னர் அங்கு விபத்து சிகிச்சை அளிக்க கூடுதல் வசதிகள் செய்யப்படும். மேலும் தொப்பூர் கணவாய் சாலையை நேராக அமைக்க, தர்மபுரி கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். சித்தேரி மலைப்பகுதியில் தலசிமியா என்ற ரத்த சோகை நோய் உள்ளது. இவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, மருத்துவக்கல்லூரி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Grotto Government Hospital ,Treatment Facility—Minister ,Subramanian , Dharmapuri: Dharmapuri Government Medical College Hospital is a government that can operate with all specialized treatment facilities
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...