×

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை புதூர் நாடு மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு-சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை புதூர்நாடு மலைப்பகுதியில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசி குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தினர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். நகர்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ்மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்த வேண்டும் என கலெக்டர் அமர் குஷ்வாஹா சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.இதைதொடர்ந்து, ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 குக்கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக புதூர்நாடு அரசு ஆரம்ப சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் ரமேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் புதூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மொழலை, புலியூர் மற்றும் சேம்பறை ஆகிய மலைக்கிராமங்களுக்கு நடந்தே சென்று அங்கு விவசாயப்பணியில் ஈடுபட்டு வந்த மலைவாழ் மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர், மொழலை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசியை செலுத்தினர். இதேபோல, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும் நேரில் சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Corona ,Next Mountain ,Javadu Hill ,Puthur ,Nadu Hill , Tirupati: Health officials in the Puthurnadu hills near Javadu hill next to Tirupati informed the hill people about the corona vaccine.
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...