×

கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக  மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வந்தனர். அதற்கு பணிந்த பாஜ மேலிடம், வயதை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் படி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தது. கட்சி தலைமையின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.இதையடுத்து சட்டமன்ற கட்சி தலைவராக உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை தேர்வு செய்யப்பட்டதை அதிகாரபூர்வமாக தலைவர்கள் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, கட்சி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகை சென்ற பொம்மை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில் மாநில 15வது சட்டபேரவையின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் பொறுப்பு முதல்வர் எடியூரப்பா, கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண்ரெட்டி, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.




Tags : Basavarajpombai ,Chief Minister of Karnataka , பசவராஜ்பொம்மை
× RELATED காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு...