பிரதமரிடம் மம்தா வலியுறுத்தல் பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை தேவை: சோனியாவுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது முதல் நாள் பயணத்தில், பிரதமர் மோடியையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசினார்.  மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை குறிவைத்து, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முதல் முறையாக மம்தா டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுவதால் அவரது பயணம் தேசிய அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பயணத்தின் முதல் நாளான நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத், ஆனந்த் சர்மா, அபிஷேக் சிங்வி ஆகியோரை மம்தா தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ் இல்லாமல் பாஜவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய வாய்ப்பில்லை என கமல்நாத், மம்தாவிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மம்தா சந்தித்தார். அப்போது, மேற்கு வங்கத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு மம்தா பிரதமர் மோடியை முதல் முறையாக சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவை மம்தா சந்திக்க உள்ளார். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், திமுக எம்பிக்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

Related Stories:

>