×

இன்சூரன்ஸ் நிறுவனம் பெயரில் ரூ.2.13 கோடி மோசடி தலைமறைவாக இருந்த டெல்லி பெண் கைது: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: இறந்த கணவரின் இன்சூரன்ஸ் பணம் பெற்று தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ.2.13 கோடி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னை மந்தைவெளி திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். தொழிலதிபரான இவர், உயிரிழந்துவிட்டார். இவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செலுத்திய பல கோடி ரூபாய் காப்பீட்டு தொகை அவரது மனைவி சுதாவுக்கு (67) வரவேண்டி இருந்தது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பணம் வருவது காலதாமதமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 2019ம் ஆண்டு தொழிலதிபர் மனைவி சுதாவின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர், ‘நான் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் கணவர் செலுத்திய காப்பீட்டு தொகை தயாராக உள்ளது. அதற்கு குறிப்பட்ட கட்டணம் நீங்கள் செலுத்த வேண்டும். அதை செலுத்தினால்தான் அந்த பணம் உங்களுக்கு கிடைக்கும்,’ என்று கூறியுள்ளார். அதை நம்பிய சுதா, செல்போனில் பேசிய நபர் அளித்த வங்கி கணக்கில் ரூ.2.13 கோடி செலுத்தியுள்ளார். ஆனால், அவர் கூறியபடி இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவில்லை. இதுபற்றி, செல்போனில் பேசிய நபரிடம் கேட்க, அவரை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதா, கடந்த 2019ம் ஆண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி டெல்லி விரைந்து  சென்ற தனிப்படை போலீசார் கடந்த மார்ச் 31ம் தேதி சுதாவிடம் ரூ.2.13 கோடி மோசடி செய்த அமன்பிரசாத் (29), பிரதீப்குமார் (29), மனோஜ்குமார் (44), குபீர்சர்மா (எ) பிரின்ஸ் (27), ஹீமன்சு தாஹி (25), ராம்பால் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டெல்லியை சேர்ந்த சிம்ரான்ஜித் (29) என்ற பெண்ணை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பின்னர் செல்போன் சிக்னல் உதவியுடன் கடந்த 24ம் தேதி டெல்லி திலக்நகர் பகுதியில் வைத்து முக்கிய குற்றவாளியான சிம்ரான்ஜித்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றவாளியை டெல்லி நீதிமன்றதில் ஆஜர்படுத்தி நேற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மோசடி கும்பலுடன் சேர்ந்து ஆடம்பரமாக வாழ வேண்டி மோசடி செயலில் ஈடுபட்டதும், தமிழகம், கேரளா பகுதிகளில் பலரிடம் இதுபோல் பல கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், குற்றவாளியை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சில குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : Delhi ,Central Crime Branch , Delhi woman arrested for allegedly defrauding insurance company of Rs 2.13 crore: Central Crime Branch
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு