ஐஏஎஸ் படிக்க வைக்க முடியாததால் விரக்தி தாய், மகள் தூக்குபோட்டு தற்கொலை: கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம்

சென்னை: ஐஏஎஸ் படிக்க வைக்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான தாய், மகளுடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சி திடீர் நகர் பகுதியில் வசித்தவர் கீதாஞ்சலி (51), சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் சிவரஞ்சனி (24). பிகாம் பட்டதாரி. தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். அவருடன் கீதாஞ்சலியின் தங்கை பெங்களூரைச் சேர்ந்த ராஜலட்சுமி (45), ஒரு வாரமாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராஜலட்சுமி திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார். பின்னர் இரவு 9.45 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு மூடி இருந்தது. ராஜலட்சுமி கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, ஒரே மின் விசிறியில் தாயும், மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த கவரப்பேட்டை  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  இரண்டு உடலையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கீதாஞ்சலியின் கையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், மகளுடன் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறேன். மகள் ஐஏஎஸ் தேர்வுக்காக படித்து வரும் நிலையில் அதற்காக பக்கத்து வீட்டின் அருகே டீ கடை நடத்தி வரும் பொன்னேரி பார்வதியிடம் கடனாக பணம் பெற்றேன். எனது, மாமனார் எனக்கு எந்த உதவியும் செய்யாததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அத்தோடு சிறிதளவு நிலங்கள் உள்ளன, அந்த நிலத்தை விற்று மேற்கண்ட நபர்களுக்கு கடனை  ராஜீ (எ) ராஜலட்சுமி கொடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கீதாஞ்சலி  ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர் கீதாஞ்சலி மற்றும் மகள் கடன் தொல்லை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப் பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories:

>