10.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட முதல்வரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்தனர்: கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்ததற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி, வரவேற்பு தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை 200 புள்ளி ரோஸ்டர் பட்டியலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடச் செய்துள்ளார். மாணவர் சேர்க்கை அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த பிழையை சுட்டிக்காட்டிய சில மணி நேரங்களில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஜி.கே.மணி (பாமக தலைவர்): 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக, அதிகாரிகளோடு ஆலோசித்து அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு பாமக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு உரிமையை வழங்கி அரசாணையை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இணையும்போது, முதல்வருக்கு நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் கோரிக்கையான உள் ஒதுக்கீடை பரிசீலனை செய்வேன். நடைமுறைப்படுத்துவேன் என தெரிவித்திருந்தார்.

பொன்குமார் (விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர்): வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை, முறையான சட்ட அறிவிப்பின் மூலம் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்திட உத்தரவிட்டதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான வன்னியர்களின் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த உள்ஒதுக்கீடு என்பது ஏதோ அதிமுக ஆட்சியில் உதித்தது போல் எவரும் நினைக்கக்கூடாது. விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். எனவே வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டிற்கு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது.

வன்னியர் குல சத்திரியர் கூட்டு இயக்க தலைவர் ராம.நாகரத்தினம், பொதுச்செயலாளர் ஆர்.ஏ.ஆர்.கே.சத்திரியர்: சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பது திமுகவின் தாரக மந்திரம். அதன்படி வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று உறுதியளித்ததை இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார். முதல்வருக்கு வன்னிய மக்கள் சார்பாக கோடான கோடி நன்றி.

Related Stories:

More
>