தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் புதிய  வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பிரகாஷ், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகவராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் ஜெகதீசன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அசோக்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளை தேவைப்படும் இடங்களில் துவக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய நோக்கம்.

இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான  பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகளின் எதிர்கால தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி வழங்க, அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின்கீழ் தற்போது 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 30 லட்சம் தொழிலாளர்கள் பதிவுசெய்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம், ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களின் மீது விரைவாக தீர்வு காண்பதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டுக்கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்து திறன் பயிற்சி வழங்க வேண்டும். தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் அதிகமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் மருத்துவமனைகள் துவக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆயுஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>