டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் 25 காஸ் நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் 25 காஸ் நிலையங்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் டோரன்ட் காஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டிகேட் நிலையம் மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சிஎன்ஜி (காஸ்) நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். டோரன்ட் காஸ் நிறுவனம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோக திட்டத்திற்காக, ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் சிட்டி கேட் ஸ்டேஷன் 1.4 ஏக்கரில் டோரன்ட் காஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்  33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 25 சிஎன்ஜி நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள சிட்டி கேட் நிலையத்தில் இருந்து இந்த 25 சிஎன்ஜி நிலையங்களுக்கு எரிவாயு கொண்டுவரப்பட்டு, வாகனங்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள சிஎன்ஜி  வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும். இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம்,  டோரன்ட் காஸ் நிறுவனத்தின் இயக்குநர்  ஜீனல் மேத்தாமற்றும் அரசு உயர் அதிகாரிகள்   கலந்து கொண்டனர்.

* உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நலமுடனும் வெற்றியுடனும் திகழ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>