×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் சிறிய கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், உழவாரப்பணிகளை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் வசதியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர்கள்  சேகர்பாபு, கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து கோயில்களிலும் உழவார பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், முதற்கட்டமாக 47 பெரிய கோயில்களில் உழவார  பணிகளை மேற்கொள்ள, துறையின் இணையதளம் வழியாக பதிவு செய்யும் சிறப்பு வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தாங்கள் விரும்பும் தேதியில் உழவார பணி செய்யும் நபர்கள், பதிவு செய்தால் முறையாக அதற்கான  அனுமதி இணையதளம் வழியாக தரப்படும். கடந்த காலங்களில் 47 கோயில்கள் அதிக வருவாய் வரும் கோயில்களாக இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.

ஆடி மாதத்தையொட்டி சிறு கோயில்களுக்கு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். மாநிலம்  முழுவதும் 36,000 கோயில்கள் உள்ளது. இதில், 12,000 கோயில்களில் ஒரு கால பூஜை நடக்கிறது. கடந்த 2 மாதங்களில் 170 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாரை நியமித்தால், கோயில்கள் நிர்வாகம் சிறப்பாக இருக்குமோ, அவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதுவும், இந்து  ஒருவர்தான் நியமிக்கப்படுவார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது அர்ச்சகர்கள், ஓதுவார்கள், மடப்பள்ளி ஊழியர்கள், தவில்  வாசிப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆகம பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள், சிறிய கோயில்களில் அர்ச்சகராக  நியமிக்கப்படுகின்றனர். 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு படிப்படியாக  நியமனம் செய்யப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.

* உழவார பணிகளுக்கு பதிவு செய்வது எப்படி?
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகள் செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வல குழுக்கள் www.hrce.tn.gov.in என்கிற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். முன்பதிவு செய்யப்பட்ட உழவாரப் பணியினை உரிய தேதியில் தங்களால் செய்ய இயலாத நிலை ஏற்படின் இசேவை பகுதிக்கு சென்று பதிவு செய்த நபர்களே தங்களது அனுமதியினை ரத்துசெய்ய வேண்டும்.

Tags : Minister ,Sekarbabu , All castes will be ordained as priests in small temples: Minister Sekarbabu
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...