×

உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மாயாற்றை கடந்த பழங்குடியின மக்கள்: பாலம் கட்டித்தர கோரிக்கை

சத்தியமங்கலம்; உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய பாடை கட்டி மாயாற்றை கடந்த பழங்குடியின மக்கள் பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாற்றில் தற்போது  செந்நிறத்தில் மழைநீர் கரை புரண்டு ஓடுகிறது. மாயாற்றின் தென்கரையில் நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா ஊராட்சிக்கு உட்பட்ட கல்லம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி பழங்குடி இனத்தை சேர்ந்த திவணன் மற்றும் அவரது மனைவி ராமி (65) வசித்து வருகின்றார்.

இருவரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர்களது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் அருகே உள்ள கரிக்கூர் கிராமம் ஆகும்.  இந்நிலையில் இறந்த ராமியின் உடலை அடக்கம் செய்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரிக்கூர் கிராமத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தனர். இதை அடுத்து தெங்குமரஹாடா ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ராமியின் உடலை பாடைகட்டி அடர்ந்த வனப்பகுதி வழியாக கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் இறங்கி ஆற்றைக் கடந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றி  உடலை கொண்டு சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹடா ஊராட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. தெங்குமரஹாடா ஊராட்சியில் உள்ள தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் அல்லிமாயாறு, சித்திரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வனப்பகுதியில் ஓடும் மாயாற்றை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வன கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும் என தெங்குமரஹாடா ஊராட்சியை சேர்ந்த வன கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  தனி தீவு போல் வாழ்ந்து வரும் தெங்குமரஹடா ஊராட்சி மக்களுக்கு அடர்ந்த வனப் பகுதியில் ஓடும் மாயாற்றைக் கடந்து செல்ல பாலம் கட்டி தரவேண்டும் என்பது தெங்குமரஹாடா வனகிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Mayan , Indigenous peoples who crossed the river to bury the body of an elderly woman who died of ill health
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...