×

மசினகுடி அருகே வனப்பகுதியில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

ஊட்டி: மசினகுடி அருகே ஆனைக்கட்டி வனப்பகுதியில் வாகனங்களை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி, சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் கணிசமான அளவு காட்டுயானைகள் உள்ளது.  தற்போது சுற்றுலா பயணிகள் வர தடை உள்ளதால் சாலைகளில் காட்டுயானைகள் சுதந்திரமாக உலா வருகின்றன. இந்தநிலையில் மசினகுடியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆனைகட்டி பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தது.

அதில் ஒரு யானை சாலையின் நடுவில் நடந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை திடீரென துரத்தியது. இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பின்நோக்கி வேகமாக இயக்கினர். சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு துரத்தி வந்த காட்டுயானை, அதன்பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து, முதுமலையில் உள்ள சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதனால் வாகனங்களை காட்டுயானைகள் துரத்தும் சம்பவங்கள் நடக்கிறது. வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Masinagudi , Wild elephant chasing vehicles in the forest near Machinagudi
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!