மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வருகை: சரணாலயம் அமைக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக மாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பறவைகள் குறித்து ஆய்வு செய்து வரும் ‘அனதர் பேஜ் பார் சொசைட்டி’ நிறுவன இயக்குனர்கள் குமார், முத்துலட்சுமி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி கண்மாய், நிலக்கோட்டை அருகே உள்ள குன்னுவாரன் கோட்டை கண்மாய், மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய், பழனி சண்முகா நதி ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் ஐரோப்பா கண்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் உணவு தேவைக்காக வருகின்றன.

நூற்றுக்கணக்கான உள்நாட்டு பறவைகளும் இந்த கண்மாய்களில் உள்ள மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய்க்கு புள்ளி மூக்கு வாத்துகள், முக்குளிப்பான்கள், நத்தை கொத்தி நாரைகள், பெரிய, சிறிய, நடுத்தர நீர்க்காகங்கள், சங்குவளை நாரைகள், கூழைக்கடாக்கள், உண்ணி கொக்குகள் போன்ற நூற்றுக்கும் அதிகமாக பறவைகள் முகாமிடுகின்றன. இங்கு இதுவரை 109 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கண்மாயின் நடுவில் உள்ள நீர் கருவேல மரங்கள் இதன் சிறப்பாகும். இந்த மரங்கள் பறவைகள் இளைப்பாறவும், இனப்பெருக்கத்தில் ஈடுபடவும் மிகவும் உதவுகின்றன.

இந்த கண்மாய் திண்டுக்கல் சமூக வன கோட்டத்திற்குட்பட்டது. பறவைகள் இனப்பெருக்க காலத்தில் இந்த கண்மாயில் உள்ள கருவேல மரங்களை 452 மெட்ரிக் டன் அளவிற்கு வெட்டி கொள்ள வனத்துறை அனுமதித்துள்ளது. ஆனால் பல்லுயிர் முக்கியத்துவம் குறித்து அறியாமல் கண்மாயில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. இதனால் பறவைகளின் உணவுத்தேவை மற்றும் இனப்பெருக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களுக்கு உள்ளது. ஏனென்றால் மனிதர்களின்றி பறவைகளால் வாழ முடியும்.

ஆனால் பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது. மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாயில் மரங்களை வெட்டுவதற்கு தடை செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கண்மாயை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, பறவைகள் சரணாலயமாக வனத்துறை அறிவிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

More
>