×

புதிய வேலைவாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய நோக்கம் : கூட்டத்தில் முதல்வர் உரை

சென்னை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் துவக்கவும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளைத் தோற்றுவிக்கவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (27.07.2021) தலைமைச் செயலகத்தில்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த  முதலமைச்சர் அவர்கள்,  பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்குத் தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்பப் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் துவக்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளைத் தேவைப்படும் இடங்களில் துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 


புதிய வேலைவாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான  பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், தொழிற்சாலைகளின் எதிர்காலத் தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சி வழங்கவும், அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆற்றிவரும் பணிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடுகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாடுகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 

நம் மாநிலத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்கீழ் தற்போது 18 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 30 இலட்சம் தொழிலாளர்கள் பதிவுசெய்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம், ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களின் மீது விரைவாகத் தீர்வு கண்டு பயனாளிகளுக்கான பலன்கள் / நலத்திட்ட உதவிகள், குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கவும், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைத்து அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கைப்பேசி செயலினை உருவாக்கிடவும், தொழிலாளர் துறையில் அதிக அளவிலான சேவைகளை இணைய வழியாக்கி தொழில் புரிவதைச் சுலபமாக்கிடவும், தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்களைக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அரசின் திறன் மேம்பாடு தொடர்புடைய திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முதலமைச்சர் அவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில், தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், 3-டி பிரிண்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில்  திறன் பயிற்சிகள் வழங்கவும், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார். 


மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டுக் கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்புக் குறித்துத் திறன் பயிற்சி வழங்குதல்,  மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவை உருவாக்குதல் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.  மேலும், அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.    தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ் அதிகமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் மருத்துவமனைகள் துவக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து மருந்தகங்களிலும் ஆய்வக வசதிகள் உருவாக்கவும் கூடுதலாக ஆயுஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால் இணையதளம் மூலம் ஏற்கனவே வழங்கப்படும் சேவைகளுடன் சுலபமாகத் தொழில் நடத்தும் வசதிகளைத் தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தருவதற்காக வளைதளத்தில் சில மாற்றங்களைச் செய்யவும், மேலும் சேவைகளைக் கணினிமயமாக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர் திரு.இரா.கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்  திரு.நி.பிரகாஷ், இ.ஆ.ப., அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  முனைவர் சி.என். மகேஸ்வரன்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ. வீரராகவராவ், இ.ஆ.ப., தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் திரு.கே.ஜெகதீசன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  இயக்குநர் ஜி.அசோக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Tags : Government , Job opportunities, for young people, government, purpose, chief
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...