×

75வது ஆண்டு சுதந்திர விழா வெறும் அரசு நிகழ்ச்சியாக இருக்கக்கூடாது, மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும்: எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘பெகாசஸ்’ விவகாரத்தை விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் அமளிக்கு இடையே நேற்று இரு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்று காலை வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து இரு அவைகளையும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின் அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கின. இதற்கிடையே, பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. 


அப்போது அவர் பேசுகையில், ‘பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் இடையூறு செய்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது’ என்றார். தொடர்ந்து  நாடாளுமன்ற விவகார அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், ‘சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், பாஜக எம்பிக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 75வது ஆண்டு விழா வெறும் அரசு நிகழ்ச்சியாக இருக்கக்கூடாது. மக்கள் பங்களிப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். வரும் 2047ம் ஆண்டில் இந்தியா 100வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட உள்ளதால், மக்கள் எதிர்கால இந்தியா குறித்து என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்த பரிந்துரை, யோசனைகளை பெற வேண்டும்’ என்றார்.



Tags : 75th Independence Day ,Modi , 75th Anniversary, Independence Day, People's Movement, Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...