×

ஒலிம் பிக்கில் தங்கம் ஜெயிக்கணும்! -ரிதமிக் ஜிம்னாசிஸ்ட் அனன்யா

நன்றி குங்குமம் தோழி

டேப்ரெக்கார்டரில் மியூசிக் ஒலிக்க, அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தவர், அடுத்து நடனம் ஆட ஆரம்பிச்சார். இதை தொடர்ந்து கையில் ரிப்பனை பிடித்துக் கொண்டு ஜிம்னாஸ்டிக் ெசய்ய ஆரம்பித்தார். பாட்டுக்கு நடனம் ஆடலாம்... உடற்பயிற்சி செய்யலாம். இது என்ன எல்லாவற்றின் கலவை என்ற போது...

‘‘இதுதான் ரிதமிக் ஜிம்னாசியம்’’ என்றார் புன்னகைத்தபடி அனன்யா கரிகிபட்டி. 16 வயது நிரம்பிய பள்ளி மாணவி அனன்யா. ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் இவர், மாஸ்கோவில் நடைப்பெற்ற சர்வதேச ஜூனியர் ரிதமிக் ஜிம்னாசியம் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். மெக்கா ஆஃப் ஜிம்னாசியம் என்று அழைக்கப்படும் ரஷ்யாவிலேயே இதை சாதித்தது தான் மேலும் பெருமையை அவருக்கு சேர்த்துள்ளது.

அனன்யாவின் தாய், ஒரு மருத்துவர். ஆனால் தன் மகளுக்கு பிடித்த ரிதமிக் ஜிம்னாசியம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், அதில் நடுவராக பயிற்சி பெற்று தேசிய அளவில் நடுவராகவும் விளங்குகிறார். “அனன்யாவிற்கு பயிற்சியாளர் எவரும் இல்லாத போது, அவளது குறை நிறைகளைச் சொல்ல யாருமே இல்லை. ஒரு தாயாக என்னால் அவள் செய்வதை ரசிக்க முடிந்ததே தவிர, திருத்தங்கள் சொல்ல தெரியவில்லை. அவள் பள்ளி நேரம் போக கிடைக்கும் நேரங்களில் தினமும் பயிற்சி செய்வாள்.

அவள் இவ்வளவு கடின உழைப்புடன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் போது, அதில் நாமும் கொஞ்சம் உதவ வேண்டும் என்று தோன்றியது. அதற்கு முதலில் ரிதமிக் ஜிம்னாசியம் என்றால் என்ன என்ற சரியான புரிதல் வேண்டும் என்பதற்காகத்தான், நான் இதில் பயிற்சி பெற்றேன்” என்கிறார், அனன்யாவின் தாயார், பத்மஜா.

“நான் ஸ்கூல் படிக்கும் போது, ஜிம்னாசியம் என்ற வார்த்தையை முதன் முதலில் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு, அதை அப்படியே யுடியூபில் தேடிப்பார்த்தேன்’’ என்று பேச ஆரம்பித்தார் அனன்யா.

‘‘யுடியூப்பில் தான் முதலில் ரிதமிக் ஜிம்னாசியம் பற்றிய வீடியோ பார்த்தேன். அப்ப எனக்கு ஒன்பது வயசு. வீடியோவில் பார்த்து அதே ேபால் நானும் செய்ய ஆரம்பிச்சேன். ஜிம்னாசியத்தில், ஐந்து வகை உண்டு. அதில் ஒன்றுதான் ரிதமிக் ஜிம்னாசியம். பயிற்சியாளர் இல்லாததால், குறிப்பிட்ட பயிற்சி நேரம் என எதுவும் கிடையாது. கிடைக்கும் நேரம் எல்லாம் பயிற்சி செய்வேன்.

பள்ளிக்கு செல்லும் நேரம் மற்றும் படிப்பு நேரம் போக மற்ற நேரத்தினை பயிற்சிக்காக ஒதுக்குவேன். ரிதமிக் ஜிம்னாசியம் மற்ற ஜிம்னாசிய முறை போல் கிடையாது. ரிதமிக் ஜிம்னாசியம் வெறும் விளையாட்டு இல்லை.

இது ஒரு கலை. இதில் நடனமும் கலந்திருக்கு. மேலும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ரஷ்ய விளையாட்டு. ஒரு பாடலை தேர்ந்தெடுத்து,  அதற்கு ஏற்றவாறு, உடற் பயிற்சி, ஜிம்னாசியம், நடனம் என எல்லாமே கலந்து செய்யணும். கையில், வளையம்,  ரிப்பன், கயிறு, பந்து, ஜிம்னாஸ்டிக் கிளப் போன்ற உபகரணங்களையும் பயன்படுத்தலாம்’’ என்றவர் இந்த விளையாட்டினை யார் வேண்டும் என்றாலும் விளையாடலாமாம்.

‘‘தொடர் பயிற்சியும், கடின உழைப்புமிருந்தால், யார் வேண்டுமானாலும் ரிதமிக் ஜிம்னாசியம் செய்யலாம். ஆனால், இந்த விளையாட்டில் நம் உடல் பாகங்கள் அனைத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டும். அதனால் நன்றாக வளைந்து நெளிந்து அசைவுகள் செய்ய ஃப்லெக்ஸிபிலிட்டி அவசியம். மேலும் தசையும் வலுவாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமில்ல... இதற்கான உபகரணங்களை தூக்கிப்போட்டு பிடித்து, சுழன்று கொண்டே இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் உபகரணம், தனியாக இல்லாமல், நம் உடலின் ஒரு பாகம் போல இயங்குவதும் அவசியம். மெல்லிய உடல்வாகு, மிதமான உயரம் இதற்கு பிளஸ். ரிதமிக் ஜிம்னாசியம் பொறுத்தவரை 23 வயது வரைதான் நன்றாக விளையாடமுடியும்.

அதற்கு மேல் இந்த விளையாட்டை தொடர முடியாது, போட்டிகளிலும் பங்கு பெற இயலாது. சிறு வயது முதலே இதில் பயிற்சி செய்தால்தான், 16 வயதில் ஜூனியர் பிரிவில் சேர்ந்து 23 வயது வரை விளையாடலாம்” என்ற அனன்யாவை தொடர்ந்து அவர் தாயார் பத்மஜா, இந்த விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி விவரித்தார்.

“அனன்யா சின்ன வயதிலிருந்தே ரொம்ப கூச்ச சுபாவம்தான். போட்டிகளில் பங்கேற்ற பின், அவளுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது. குறிப்பாக ரஷ்யாவில் தங்கம் வென்றதும், அங்கே அவளுக்கு கிடைத்த பாராட்டுகளும் மரியாதைகளும், அவளை மேலும் வலிமையாக்கியுள்ளது. மாஸ்கோவில், ஒலிம்பிக் சாம்பியன் Anna Gavrilenkoவிடம் தான் பயிற்சி பெற்றாள். இப்போது ஸ்கைப் மூலம் அவரிடம் பயிற்சி எடுத்து வருகிறாள்” என்று பெருமை பொங்க பேசுகிறார் பத்மஜா.

“முதலில் பயிற்சியாளர் இல்லாததே பெரிய சவால்தான். இந்தியாவில் ரிதமிக் ஜிம்னாசியத்திற்கான கருவிகள் எதுவுமே சரியாக கிடைக்காது. ரஷ்யாவில் இருந்து தான் வாங்குவோம். உடலை வளைத்து செய்ய வேண்டிய விளையாட்டு என்பதால், கடின பயிற்சிக்குப் பின், கை - கால் என இல்லாமல், உடலின் அனைத்து பாகங்களுமே வலிக்கும்.

ஆனால், இதை விரும்பி செய்வதால், எத்தனை வலி இருந்தாலும், மறுநாளும் பயிற்சி எடுக்க கிளம்பிடுவேன். அடுத்து, டயட். நல்ல வலிமையாகவும் அதே சமயம் ஒல்லியாகவும் இருக்கணும். ரொம்ப ஸ்ட்ரிக்டான டயட் ஃபாலோ செய்றேன். கார்போஹைட்ரேட் உணவுகள் அளவோட தான் எடுக்கணும்.

ஜங்க் உணவுகள் தொடவே கூடாது. ஆரம்பத்தில் கஷ்டமா தான் இருந்தது. இப்ப பழகிடுச்சு. இங்க இதற்கு முறையான பயிற்சியாளர்கள் கிடையாது. ஒவ்வொரு கோடை விடுமுறைக்கு பயிற்சிக்காக ரஷ்யாக்கு போயிடுவேன். என்னுடைய அடுத்த  கோல், ஆசிய விளையாட்டு. அடுத்து இந்தியாவிற்காக ஒலிம்பிக் ஜெயிக்க வேண்டும்’’ என்கிறார் அனன்யா உறுதியாய்.

ஸ்வேதா கண்ணன்

Tags : Olympics ,Gymnastic Ananya ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...