×

மின் இணைப்பு வழங்காததால் மன வளர்ச்சி குன்றிய குழந்தையுடன் இருட்டில் தவிக்கும் தம்பதி-ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

விழுப்புரம் : மின் இணைப்பு வழங்காததால் இருட்டில் தவிக்கும் தம்பதியினர், ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துமாரி (35). இவர், தனது மன வளர்ச்சி குன்றிய குழந்தை, மனைவியுடன் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சலவை தொழிலாளியான நான், போதிய வேலையில்லாததால் சென்னை போன்ற வெளியூர்களுக்கு சென்று வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது மகன் தினேஷ்குமார், மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள அவருக்கு சிகிச்சைக்காக செலவு செய்து பல மருத்துவமனைகளுக்கு சென்று வருகிறோம். இந்நிலையில், நாங்கள் குடியிருந்த வீட்டில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. மகனின் மருத்துவ சிகிச்சையில் வெளியூர் சென்று வந்ததால் இந்த குறைந்தபட்ச கட்டணத்தை எங்களால் கட்ட முடியவில்லை.

இதனால், மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மீட்டரையும் எடுத்து சென்றுவிட்டனர். மீட்டரை எடுக்கும் முன்பு எனக்கு எந்தவித தகவலையும் கூறாமல் ஊழியர்கள் அகற்றிவிட்டனர். தற்போது, மின்சாரம் இல்லாததால் மனவளர்ச்சி குன்றிய குழந்தையுடன் கொசுக்கடியிலும், இருட்டிலும் கஷ்டப்பட்டு வருகிறோம். மேலும், 2வதாக பிறந்த பெண் மாற்றுத்திறனாளி குழந்தையும், மின் விளக்கு வசதியில்லாததால் எங்களால் பராமரிக்க முடியாமல் இறந்துவிட்டது. எனவே, ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்கிட வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharna , Villupuram: Couple stranded in darkness due to power outage
× RELATED பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு...