உக்கடம் மேம்பால பணிக்காக 85 வீடுகள் இடித்து அகற்றம்

கோவை : கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உக்கடம் மேம்பால பணிகளுக்காக 85 வீடுகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வளையார் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது.

இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் கட்ட மேம்பால பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 3 இடங்களில் இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளது.

போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இறங்கு தளத்தை பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம். உக்கடம் பேருந்து நிலையம் இறங்கு தளம் மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம்.

ஆத்துப்பாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு சாலை செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும், வாகன ஓட்டிகளும் பயன் அடைவார்கள்.

உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலையில் இறங்கு தளம் அமைக்கும் பணிக்காக ராமர் கோவில் முன்புறம் உள்ள வீடுகளை அகற்ற ஏற்கனவே மாநகராட்சி சார்பாக உத்தரவிடப்பட்டது. இந்த பணிகள் சில காரணங்களுக்காக தாமதம் ஆனது. இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் நேற்று ராமர் கோவில் அருகே உள்ள 85 வீடுகளை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினார்கள்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 492 வீடுகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. அதே சமயம் 106 பேருக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories:

More
>