பஸ் நிலையத்தில் தவற விட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த துறையூர் போலீசார்-மத்திய மண்டல ஐஜி பாராட்டி, வெகுமதி

திருச்சி : துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் போலீசார் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் துறையூர் பஸ் நிலையத்தில் பெற்றோரை காணாமல் ஒரு பெண் பழ வியாபாரியின் பாதுகாப்பில் குழந்தை தவித்துக் கொண்டிருந்ததை கண்டனர். விசாரித்ததில் நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த பெரியசாமி-பிரேமா தம்பதியரின் 3 வயது மகன் வெற்றிவேல் என தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்து, குழந்தை குறித்த தகவலை வாட்ஸ்அப் செயலி மூலம் அனைத்து குழுக்களிலும் பகிர்ந்து குழந்தையின் பெற்றோரை உடனடியாக கண்டறிந்து தகவல் தெரியப்படுத்தினர்.

விசாரணையில் குழந்தையின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் சமயபுரம் கோயிலுக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்கையில், துறையூர் பஸ் நிலையத்தில் தங்கள் குழந்தையை தவறவிட்டது கண்டறியப்பட்டது. பின்னர் துறையூர் காவல் நிலையத்திற்கு குழந்தையின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நல்ல முறையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு குழந்தையின் பெற்றோர் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

மேற்படி குழந்தை காணாமல் போன சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை மென்மேலும் சிறப்பாகப் பணிபுரிய ஊக்குவிக்கும் வகையில் மத்திய மண்டல ஐஜி., பாலகிருஷ்ணன் நேற்று மத்திய மண்டல அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட 3 போலீசாரையும் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Related Stories:

>