×

1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமானது மகாராஷ்டிரா!: மாநில சுகாதாரத்துறை தகவல்..!!

மும்பை: மகாராஷ்டிராவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 29,689 பேர் பாதித்துள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது. புதிதாக 415 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.21 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை 44,19,12,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மராட்டியம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று ஒன்றிய அரசு உறுதியாக கூறி வருகிறது. ஒன்றிய அரசு பரிந்துரைத்த கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட இரு தடுப்பூசிகள் பல மாநிலங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உருவெடுத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மராட்டிய மாநிலத்தில் நேற்று 6,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 62,64,922 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்புக்கு 123 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை 1,31,552 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 5,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 60,35,029 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 94,985 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.


Tags : Maharashtra ,State Health , Maharashtra, 1 crore people, 2 dose corona vaccine
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...