×

ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி : 3 முறை எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் விலைக்கு வாங்க பேரம் : காங்கிரஸ் காட்டம்

ராய்ப்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க 3 முறை எம்எல்ஏக்களுக்கு பாஜக விலை பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் கண்ட் சஹாய் குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக கடந்த சனிக்கிழமை 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் தருவதாக சிலர் தம்மிடம் பேரம் பேசியதாக எம்எல்ஏ நமன் பிக்சல் கொங்கரி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் கண்ட் சஹாய், ஜார்கண்டில் ஆட்சி இழந்ததை பாஜக தலைமையால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். இது வரை 3 முறை எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக கூறியுள்ள அவர், அவர்கள் ஒன்றும் சாதாரண விலை கொடுக்க முன்வரவில்லை என்றும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தருவதாக ஆசை காட்டினர் என்றும் குறிப்பிட்டார். அவர்களிடம் இருப்பது ரிசர்வ் வங்கியின் நோட்டுகள் தானா என்றும் அவர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்கண்ட் முக்தி மோட்சா காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஜார்கண்ட் முக்தி மோட்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆட்சியில் இழந்துவிட்ட பாஜக, ஹேமந்த் சோரன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.


Tags : BJP ,Jharkhand ,Congress , ஜார்க்கண்ட்
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு