×

அரக்கோணம் அருகே நேற்று ரயிலை மறித்த பொதுமக்கள்.: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே நேற்று ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரக்கோணத்தில் சீசன் டிக்கெட் வழங்கக்கோரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், 3 மணி நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா 2-வது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை கடந்த மே மாதம் முதல் சிறப்பு ரயிலாக அறிவிக்கப்பட்டு இயங்கியது.  

இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜோலார்பேட்டை- சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த சில வாரங்களுக்கு முன் இயங்க தொடங்கியது. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் கிராமப்புற தொழிலாளிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் அவதியடைந்தனர்.

தங்களுக்கு மீண்டும் சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் அதை ஏற்கவில்லை. இந்நிலையில், வழக்கம்போல் நேற்று அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ், காட்பாடி, அரக்கோணம் வழியாக அன்வர்திகான்பேட்டைக்கு காலை 7.15 மணியளவில் வந்தது.  

அப்போது அங்கு வந்த அன்வர்திகான்பேட்டை, குன்னத்தூர், மின்னல், மேல்களத்தூர், காட்டுப்பாக்கம், செல்வமந்தை, எலத்தூர், கீழ்வீதி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டு சீசன் டிக்கெட் வழங்கக்கோரி கோஷமிட்டனர். இதனால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.

இந்தநிலையில், ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக இன்று சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Arakkonam , Civilians who missed the train yesterday near Arakkonam .: Police today filed a case against 200 people involved in the protest
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...