×

கொரோனா முழு ஊரடங்கிற்கு பிறகு...விதிகளை மீறும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்: சிக்கி திணறும் சென்னை மாநகரம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை: இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் டெல்லி, மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை மாநகரம் உள்ளது. தமிழகத்தில் 2 கோடியே 84 லட்சத்து 654 வாகனங்கள் இயங்கி வருகிறது. அதில் 60 விழுக்காடு இருசக்கர வாகனங்கள்.  சென்னையில் நாள் ஒன்றுக்கு இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வெளிமாநில வாகனங்கள் என 70 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகிறது. சில கட்டுப்பாடுகளுடன் கொரோனா ஊரடங்கை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. போக்குவரத்து இப்போது அதிகரித்துள்ளது. சென்னை மாநகரம் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றபடி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாததால் சென்னை வளர்ச்சியடையாமல் போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடி வருகிறது. மாநகரம் வளர்ச்சிக்கு சாலை வசதிகள்தான் முக்கியம். ஆனால் சென்னையில் எந்த முக்கிய சாலைகளும் விரிவுபடுத்தப்படாமலும், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான். அதன் பிறகு பெரிய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டமைப்பை மேம்படுத்தாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, வடபழனி 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, வேளச்சேரி, அடையார், மயிலாப்பூர், தி.நகர், சாலிகிராமம், திருவான்மியூர், போரூர் நெடுஞ்சாலை என பிரதான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் ‘பீக்ஹவர்’ கடந்தும் அனைத்து நேரங்களிலும் நீண்ட வரிசையில் நிற்பதை காணமுடிகிறது. சென்னையில் 1,700 சந்திப்புகள் உள்ளன. அதில் முக்கிய சாலைகளில் 408 சிக்னல்கள் போக்குவரத்து போலீசார் கட்டுப்பட்டில் உள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு அண்ணாசாலை மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் செல்லும் நேரங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மற்ற நேரங்களில் ஒழுங்குபடுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பிற சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியில் பார்ப்பது அரிதாக காணப்படுகிறது. காவலர்கள் இல்லாமல் சிக்னல்கள் மட்டும் இயங்குவதால் வாகன ஓட்டிகள் அவரவர் விருப்பம் போல் செல்கின்றனர்.  இதுதான் சென்னையில் தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று வாகனம் ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், சென்னை போக்குவரத்து பிரிவில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 3 ஆயிரம் முதல் 3,200 போக்குவரத்து போலீசார் பணிகளில் உள்ளனர். ஆனால் அவர்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முழுமையாக பணியில் ஈடுபடவில்லை. மரத்தடி மற்றும் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் தான் பார்க்க முடிகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பிரதீப்குமார் உள்ளார். இவருக்கு சென்னையில் பணியாற்றிய முன் அனுபவம் கிடையாது. அதேநேரம் இதுவரை போக்குவரத்து பணியை கையாண்டது கிடையாது. அவர் பணி காலத்தில் அதிகளவில் சட்டம் ஒழுங்கில் தான் பணியாற்றி உள்ளார். இதனால், கொரோனா காலத்திற்கு பிறகு சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் சற்று சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போக்குவரத்து  நெரிசலை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மாநகர போக்குவரத்து போலீசார் கட்டுப்பாட்டில்  சென்னை முழுவதும் 335 முக்கிய சாலைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.  

சென்னையில் போக்குவரத்து போலீசார் சார்பில் அமைக்கப்பட்ட 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்களில் கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் தான் வேலை செய்வதாக கூறப்படுகிறது.  பழுதடைந்த கேமராக்கள் அனைத்தும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளது. பார்க்கிங் ஆன நடைபாதைகள்  சென்னை மாநகர் எல்லையில் நெடுஞ்சாலைகள், பேருந்து சாலைகள், சர்வீஸ் சாலைகள், சிறிய சாலைகள், இணைப்பு சாலைகள், பேருந்து செல்லா சாலைகள் என 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. அதில் 30 ஆயிரம் சாலைகள் போக்குவரத்து சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து நடைபாதைகளிலும் பைக்குகள், ஆட்டோக்கள், கார் மற்றும் சிறிய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, மயிலாப்பூர் லஸ் சிக்னல், கச்சேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை இணைக்கும் சாலைகள், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, திருவான்மியூர், துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், கோடம்பாக்கம்  நெடுஞ்சாலை, ஆற்காடு நெடுஞ்சாலை, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டு, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் பீக்ஹவரில் சென்னை மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் மற்றும் டாடா ஏஸ் போன்ற வாகனங்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து வகையான கனரக வாகனங்கள் மாநகர பகுதிகளில் சர்வசாதாரனமாக வந்து செல்கின்றன. அதை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதே இல்லை.

முன்பு ‘நோ பார்க்கிங்’ பகுதியில் யாரேனும் வாகனம் நிறுத்தினாலும், சாலையோரம், மேம்பாலங்கள் அருகே, சர்வீஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.  ஆனால் கொரோனாவுக்கு பிறகு போக்குவரத்து போலீசார் சாலைகளில் மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். கொேரானாவுக்கு பிறகு பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை. விதிகளை மீறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சாலைகளில் இஷ்டம்போல் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு பொதுமக்களின் அலட்சியமே  முக்கிய காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Tags : Corona ,Chennai , Corona, Chennai
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...