×

இஸ்ரோ உளவு விவகாரம்: கேரள காவல் அதிகாரிகள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994ம் ஆண்டு உளவு வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். இதில் போலீஸ் சதி இருப்பதாக நம்பி நாராயணன் குற்றம் சாட்டினார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி டிகே. ஜெயின் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்து உத்தரவிட்டது. மேலும், கேரள அரசு அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கவும், ஜெயின் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏஎம். கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி தரப்பில் ஆஜரான வக்கீல், `ஜெயின் கமிட்டி அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

ஏனென்றால் சிபிஐ.யினர் அதனை முழுமையாக நம்பி அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்,’’ என்று வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், ``குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஜெயின் கமிட்டி அறிக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த கூடாது. இவ்வழக்கில் எப்ஐஆர் தாக்கல் செய்துள்ள சிபிஐ ஆதாரங்களை சேகரித்து, சட்டத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். ஜெயின் கமிட்டி அறிக்கை ஒரு அடிப்படை தகவல் மட்டுமே. இறுதியில், சிபிஐ விசாரணையின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்படும். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஜெயின் கமிட்டி இத்துடன் செயல்படுவதை நிறுத்தி கொள்ளலாம்,’’ என்று உத்தரவிட்டனர்.

Tags : ISRO ,CBI ,Kerala ,Supreme Court , Supreme Court
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...