×

10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் நன்றி

சென்னை: வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டை 26.2.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது.

பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள். இவ்வாறு ராமதாஸ் டிவிட்டரில் கூறியுள்ளார். இதுபோல் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணியும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Ramadas ,Stalin , Order to implement 10.5% Vanniyar reservation: Ramdas thanks Chief Minister MK Stalin
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...