‘ஐ கனெக்ட்’ திட்டம் மூலம் ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை: அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு

சென்னை: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ‘ஐ கனெக்ட்’ என்ற திட்டத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி வரை இணையதளம் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம் என்று அகர்வால் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, டாக்டர் அகர்வால்ஸ் ஐ கனெக்ட் என்ற ஒரு இலவச ஆன்லைன் ஆலோசனை தளத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதிலுமிருந்து நோயாளிகள், மருத்துவ வல்லுநர்களிடம் தங்களது கண் நிலைமைகள் குறித்த ஆலோசனை, இரண்டாவது கருத்துரை மற்றும் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை ஆகஸ்ட் 15ம் தேதி இலவசமாக பெறலாம்.

மேலும் வீடுகளிலிருந்தே தரமான கண் பராமரிப்பு பெற நினைக்கும் நோயாளிகளுக்கு ஐ கனெக்ட் பேருதவியாக இருக்கும். மருத்துவ வல்லுநர்களிடமிருந்து ஆன்லைன் ஆலோசனை பெற முன்பதிவு  செய்வதற்கு www.dragarwal.com என்ற வலைதளம் அல்லது 9167376973 என்ற எண்ணை நோயாளிகள் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் ஆலோசனைக்கு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. இதுகுறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது: ஆன்லைன் ஆலோசனைகளை வழங்குவதற்காக முதுநிலை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கொரோனா மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், குறிப்பாக ஊரடங்கின் போது டிஜிட்டல் திரையை பார்க்கும் நேரம் அதிகரிப்பு, கண் நலத்தை பாதிக்கக்கூடும். கொரோனா தொற்றானது கண் விழி, கருவிழிப்படல அழற்சி, விழி நரம்பு அழற்சி, ரத்த நாளம் மூடிக்கொள்ளுதல் போன்ற கண் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பல நேரங்களில் சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சையை பெற டெலிமெடிசின் தொலைபேசி வழியாக மருத்துவம் மற்றும் ஆன்லைன் முறையிலான மருத்துவ கலந்தாலோசனைகள், சிறப்பான வழிமுறைகளாக இருக்கின்றன. கடுமையான கண் பிரச்சனைகள் தங்களுக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, ஆரம்பநிலை கண் பரிசோதனைகள், மருத்துவ நிபுணரின் இரண்டாவது கருத்துகள் மற்றும் கண் சிகிச்சைகளுக்குப் பிந்தைய ஆலோசனையைப் பெற விரும்புகின்ற நபர்கள் அகர்வால்ஸ் ஐ கனெக்டை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More