×

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அரசு பள்ளியில் 2 லட்சத்து 4,379 மாணவர்கள் சேர்க்கை: தனியார் பள்ளிகளில் இருந்து 75,725 பேர் மாறினர்; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2 லட்சத்து 4,379 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி வழங்க திட்டமிட்டு தற்போது அது தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை நடத்தும் அளவிற்கு ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என்பதை ஆராய்ந்து பயிற்சி வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கியூ-ஆர் குறியீடு மூலம் 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதை தொடர்ந்து, மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு 2.10 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், ‘EMIS’ என்ற இணையதளத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பாக குறிப்பை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அதற்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 மாணவர்கள் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.

தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு இந்த ஆண்டு 75,725 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆன்லைன் வகுப்பின்போது ஏற்படும் இணையதள கோளாறு தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். அதன் பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காணப்படும். எல்கேஜி, யுகேஜி படித்தால் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என தனியார் பள்ளிகள் கூறினால் குறிப்பிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Mahesh Poyamozhi , 2 lakh 4,379 students enrolled in government schools across Tamil Nadu this year: 75,725 switched from private schools; Interview with Minister Mahesh Poyamozhi
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...