மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் சேவை புரிபவர்களை தேடி பிடித்து பாராட்டும் பிரதமர்: அண்ணாமலை பெருமிதம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடையே உரையாற்றுகையில், சமூகத்திலும், சமுதாயத்திலும் மக்கள் நலன் கருதி சிறப்பாக செயல்படும் சமூக சேவகர்கள் பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு அவர்களை பாராட்டி வருகிறார். தமிழகத்திலுள்ள தன்னலமற்ற சேவைகள் புரியும் ஆர்வலர்களை பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு கொண்டிருக்கிறார். நேற்றைய ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தன் சொந்த முயற்சியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ராதிகா சாஸ்திரியை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

காபி கடை நடத்தும் இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒற்றை ஆட்டோ ஆம்புலன்சில் தொடங்கி இன்று 6 ஆம்புலன்சுகள் மூலம் மாவட்டம் முழுவதும் சேவைகள் தருவதை மனதார பிரதமர் பாராட்டியிருக்கிறார். பிரதமரின் இந்த பாராட்டு, இந்த நல்லோர்கள் உள்ளத்தை எல்லாம் குளிர்வித்து மேலும் உற்சாகமாக பணியாற்றத் தூண்டுகிறது. தமிழகத்திலுள்ள பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பிரதமர் மோடியின் தமிழாக்கத்தை கேட்டு பயன்பெறுகின்றனர். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடைபெறும் சேவைகளையும், நல்லவர்களையும் தேடி பிடித்து பாராட்டும் பிரதமருக்கு தமிழகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories:

>