காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பு இடம் மீட்பு: அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1970 சதுரஅடி வணிக வளாகம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது.  

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சென்னை மாநகரில், பிரதான சாலையில் அமைந்துள்ள விலை மதிப்புள்ள நிலங்கள் கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி 33 கிரவுண்ட் விலை மதிப்புமிக்க இடம் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்டது. தற்போது இந்த இடத்தில் கோயில் பெயரில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.

மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையாக, சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இடங்களை கோயிலின் எவ்வித அனுமதியின்றி ஸ்ரீகண்டன் 1399 சதுரஅடி, சூரியநாராயணன் 112 சதுர அடி, பி.டி.அபுபக்கர் 459 சதுர அடி  ஆக மொத்தம் 1,970 சதுர அடி இடத்தை வணிக வளாகம் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.

அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன்கீழ் நடவடிக்கை எடுத்து கோயிலால் சுவாதீனம் பெறப்பட்டது. இந்நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடியாகும். இதேபோல் சென்னை நகரின் பிரதான சாலையில் உள்ள மற்ற நிலங்கள் கோயில் மூலம் சுவாதீனம் பெறப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாரிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை கைப்பற்றும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், தாயகம் கவி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், சென்னை மண்டல உதவி ஆணையர் கவேனிதா, காஞ்சிபுரம் மண்டல உதவி ஆணையர் ஜெயா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>