சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று மெரினா கடற்கரைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை ஆசாமி கோவையில் கைது

சென்னை: மெரினா கடற்கரையில் இன்னும் சற்று நேரத்தில் குண்டு வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கோவையில் கைது செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ‘மெரினா கடற்கரையில் நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் குண்டு வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் உடனே சம்பவம் குறித்து மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மெரினா கடற்கரை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. இதனால் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 8220855018 செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த பீர் முகமது (41) என தெரியவந்தது. கோவை போலீசார் உதவியுடன் மெரினா கடற்கரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி பீர் முகமதுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் அடிக்கடி போன் செய்து மிரட்டல் விடுத்து வந்ததும், இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர் குடிபோதையில் வேண்டும் என்றே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>