ரவுடி மீது பாக்சிங் தாக்குதல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

பெரம்பூர்: புளியந்தோப்பில் ஆட்டோவுடன் நின்றிருந்த ரவுடி மீது ஒரு மர்ம கும்பல் பாக்சிங் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி. இவர் நேற்று முன்தினம் மாலை புளியந்தோப்பு பகுதியில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், அவர் மீது தொடர்ச்சியாக பாக்சிங் தாக்குதல் நடத்தியது. இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டது.

படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ரவுடி மணிகண்டனை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட் மற்றும் மேலும் சிலர் பாக்சிங் போடுவது போல் அவரது முகத்திலேயே குத்தி கீழே தள்ளுவதும், அவர் மயங்கி விழுவதும் தெளிவாக பதிவாகியிருந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி மீது பாக்சிங் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories:

>