×

நாகர்கோவில் மாநகரில் ரூ10 கோடியில் 24 சாலைகள் சீரமைக்க திட்டம்: மீனாட்சிபுரம் பகுதியில் பணிகள் இன்று தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அவ்வை சண்முகம் சாலை சீரமைப்பு பணி இன்று காலை தொடங்கியது. ரூ.10  கோடியில் 24 சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள்  சீரமைக்கப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நகரின் வர்த்தக பகுதியான மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலையும் சீரமைக்கப்படாமல் இருந்தன.

பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வேண்டுகோள்படி தீயணைப்பு துறை அலுவலகம் முன் ஒழுகினசேரி வரை சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் மீனாட்சிபுரம் முதல் கோட்டார் காவல் நிலைய சந்திப்பு வரையிலான அவ்வை சண்முகம் சாலை மோசமாக கிடந்தது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் தற்போது சாலை  சீரமைப்பு பணிக்கான டெண்டர்கள் பணிகள் நடைபெற்றன. அதன்படி சிறப்பு செயலாக்க திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.

இதில் முதல் கட்டமாக மீனாட்சிபுரம் பகுதியில் சாலையை சீரமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியது. முதலில் ஜேசிபி மூலம் 3 அடிக்கு சாலையை தோண்டி அதன் பின்னர் ஜல்லி கலவை போடப்பட்டு சாலை பணிகள் நடக்கின்றன. இதன் மூலம் சாலையின் பிடிப்பு தன்மை அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். இதே போல் நாகர்கோவில் மாநகராட்சி  வார்டு எண் 1க்குட்பட்ட ஆசீர்வாதம் நகர், இடையன்விளை, வார்டு 3க்கு உட்பட்ட பள்ளிவிளை அம்மன் கோவில் தெரு, வார்டு 6 மற்றும் 29க்கு உட்பட்ட விஏஓ ஆபீஸ் முதல் சிபிஎச் மருத்துவமனை வரை உள்பட சுமார் 24 சாலைகள் ரூ.10 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.

இதில் பல சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. அந்த பணிகள் முடிவடைந்ததும் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். அவ்வை சண்முகம் சாலை மோசமாக கிடந்ததால், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். தற்போது சாலை பணி தொடங்கியதை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலை பணியையொட்டி அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

Tags : Nagarco ,Meatchipura , Rehabilitation of 24 roads at a cost of Rs 10 crore in Nagercoil: Work in Meenatchipuram area starts today
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...