×

தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் திருநங்கைளுக்கு சிலம்பு பயிற்சி: விளையாட்டு துறையில் தனிப்பிரிவு உருவாக்க கோரிக்கை

பெ.நா.பாளையம்: தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு சிலம்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் தங்களுக்கு என தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் விளையாட்டு துறையில் பயிற்சியாளர்களாக இருக்கும் பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ள மங்கையானவன் தொண்டு நிறுவனம் திருநங்கைகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து தனியாக விளையாட்டுகளை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக, கடந்த மகளிர் தினத்தில் திருநங்கைகளுக்கு இடையேயான த்ரோ பால் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த ப்ரீக் பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து திருநங்கைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளில் இலவசமாக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். முதல் விளையாட்டாக தமிழ்நாட்டின் பாரம்பரிய பாதுகாப்பு கலையான சிலம்பம் கலையை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை தொப்பம்பட்டியில் இவர்களுக்கான பயிற்சி நடந்து வருகிறது. தற்போது 25 திருநங்கைகள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிலம்ப பயிற்சியாளர்கள் பயிற்சிகளை வழங்கினர். இதுகுறித்து பேசிய மங்கையானவன் தொண்டு நிறுவன நிர்வாகி ஜமுனா கூறுகையில், ‘‘திருநங்கைகள் வந்து அவர்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும், விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள திருநங்கைகள் தங்களை அணுகலாம்.

அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என்றார். ப்ரீக் பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் பிரபு கூறுகையில், ‘‘விளையாட்டு துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் அரசு வழங்கும் ஒதுக்கீடு இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உருவாகும். மேலும், உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷன் மூலம் வரும் ஆண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனிப் பிரிவு உருவாக்கி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நம்மைப்போலவே அவர்களும் சுதந்திரமாக வாழ முடியும்’’ என்றார். சிலம்பம் கற்றுக்கொள்ளும் திருநங்கைகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் முதன் முறையாக விளையாட்டுத் துறையில் கால்பதித்துள்ளதாகவும், ஆண், பெண் மட்டுமே உள்ள இந்த விளையாட்டு துறையில் மூன்றாம் பாலினமான தங்களையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றனர்.

Tags : Tamil Nadu , For the first time in Tamil Nadu, idol training for transgender people in Coimbatore: a demand to create a separate section in the sports field
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...