விவசாயிகள் போராட்டத்தில் பேசுவதற்கு ‘மைக்’ கொடுக்காததால் மாஜி முதல்வர் கோபம்: அரியானாவில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு

ஜிண்ட்: அரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த இடத்தில், தனக்கு மைக் தராததால் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா கோபமடைந்தார். ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதமாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, போராட்ட களத்திற்கு முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதலா தனது ஆதரவாளர்களுடன் வந்தார். ஆனால், அவர் பேசுவதற்காக ‘மைக்’ வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக கோபமடைந்த அவர், எதுவும் பேசாமல் திரும்பினார். ஆனால், அவர் போராட்ட களத்திற்கு வந்தவுடன் அவரை வரவேற்று மேடைக்கு முன்னால் இருக்கையில் அமரவைத்தனர். இருந்தும், யுனைடெட் கிசான் மோர்ச்சா நிர்வாகிகள், அவர் பேசுவதற்கு மைக் தராதது அவரை கோபமடைய செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறினர். இதுகுறித்து யுனைடெட் கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் சவுதாலா போராட்ட களத்திற்கு வருவதற்கான திட்டம், ஒரு வாரத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. இதுவரை நடந்த போராட்டத்தில், எந்த கட்சியை சேர்ந்த அரசியல் தலைவருக்கும், மேடையில் இருக்கை வழங்கவில்லை.

ஆனால் சவுதாலாவுக்கு இருக்கை வழங்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் பேச அனுமதி இல்லாததால், அவருக்கு ‘மைக்’ கொடுக்கவில்லை’ என்றார். மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சவுதாலா, பிரதமர் மோடியையும், மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரையும் கண்டித்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>