×

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் பண்ணைகளில் உஷார்

நாமக்கல்: கேரளாவில் கோழிகளை பறவைக்காய்ச்சல் தாக்கியுள்ளதால், நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து வழக்கம்போல கேரளாவுக்கு முட்டை கொண்டு செல்லப்படுகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கடந்த இரு தினங்களுக்கு முன், 300க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென இறந்தன. அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கோழிப்பண்ணைக்கு சென்று, இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதித்தனர். அதில் கோழிகள் பறவை காய்ச்சல் தாக்கியதால் இறந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த மாநிலம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அரியானா மாநிலத்தில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 வயது சிறுவன் சமீபத்தில் உயிரிழந்தான். தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் கோழிகளை தாக்கியுள்ளதால், நாமக்கல் பண்ணையாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. கேரளாவில்  பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து நாமக்கல் கோழிப்பண்ணைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பண்ணைக்குள் வெளிநபர்கள் நுழைய அனுமதியில்லை. பண்ணைகளுக்கு தீவனம் ஏற்றி கொண்டு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நாமக்கல் கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் கேரளாவுக்கு 80 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டபோதும், நாமக்கல்லில் இருந்து முட்டை அனுப்புவது எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Kerala ,Namakkal , Bird flu in Kerala: Ushar in Namakkal farms
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...